Sunday, April 29, 2007

தீராநதி

1857_ம் ஆண்டில் நடந்த இந்தியச் சிப்பாய்களின் எழுச்சியின் 150_ம் ஆண்டு, இவ்வருடம் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிப்பாய் எழுச்சியை வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள் வரை ''முதல் சுதந்திரப் போர்'' என்று வருணிக்கின்றனர். ''1857_ம் ஆண்டு நடந்தது சிப்பாய் கலகம் அல்ல. அது ஒரு தேசிய எழுச்சி'' என்று வருணிக்கிறார். கார்ல்மார்க்ஸ். இன்றுவரை அதைச் சிப்பாய்கள் கலகம் என்று வருணிக்கும் அயல்நாட்டு அறிஞர்களும் உண்டு. இந்த எழுச்சியை எந்தப் பார்வையில் இருந்து பார்த்தாலும் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இது மிக முக்கிய நிகழ்வு என்பதில் சமீபத்தில் வந்த ''கடைசி முகலாயர்'' என்ற புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் நம் சிந்தனையை ஆட்கொள்வது, இந்த எழுச்சியில் ஜாதி மற்றம் மதத்தின் பங்கு என்னவென்ற கேள்விதான். இன்று உருவாகியுள்ள, இந்திய தேசிய குணாம்சத்தைப் புரிந்து கொள்ள, 1857_ல் நடந்ததை ஜாதிய மதவாத கோணத்தில் இருந்து பார்ப்பது மிக அவசியம் என்று தோன்றுகிறது. குறிப்பாக ஆவாத், பீகார், பனாரஸ் மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பாய்களாக இருந்தது, சடங்குகளை இமை பிசகாமல் பின்பற்றக்கூடிய மேல்ஜாதி இந்துக்கள்தான். மேல் ஜாதி இந்துக்களையே சிப்பாய்களாகத் தேர்ந்தெடுப்பது என்பது கிழக்கிந்திய கம்பெனியின் கொள்கையாகவே இருந்தது. (பக்கம் 136) சில படைப்பிரிவுகளில் 80 சதவீதத்திற்கு மேல் மேல்ஜாதி இந்துக்கள்தான் சிப்பாய்களாக இருந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனி இந்த மேல் ஜாதி இந்துக்களின் சடங்குகளுக்கு மரியாதை கொடுத்து அவர்களை 'மேன்மையானவர்கள்' என்ற அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. அதாவது, அவர்களுக்கான உணவு சமைக்கப்படும் முறை, அதை அவர்கள் உட்கொள்ளும் முறை என்று சகல சடங்குகளுக்கும் கவனமும், அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது. மேல் ஜாதி சிந்தனைக்கு ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்ட அங்கீகாரம், ஜாதிய சிந்தனையை வேறு ஒரு கருத்தாக்க நிலைக்குக் கொண்டு சென்றது. இந்த மாற்றத்தைத்தான் பல அறிஞர்கள் சமஸ்கிருத மயமாக்குதல் என்று வருணிக்கிறார்கள். (பக்கம் 135) ஆனால், 1855 வாக்கில் கிழக்கிந்திய கம்பெனி, கீழ் ஜாதியிலிருந்தும் சிப்பாய்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியதால், 1857 வாக்கில் மேல் ஜாதி சிப்பாய்கள் சதவிதம் சற்றே சரிவைக் கண்டது. மேல்ஜாதி இந்துக்கள் மத்தியில் சிப்பாய் என்ற தொழில் அதன் அந்தஸ்தையும் சற்றே இழக்கத் தொடங்கியது. இந்த இறுக்கத்தோடு பொது சேவை சட்டம் நடைமுறைக்கு வந்து எல்லா சிப்பாய்களும் வெளிநாடுகளில் சேவை செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கியது. மேல்ஜாதி மரபுப்படி கடலை கடப்பது தடைசெய்யப்பட்டது என்பதால், இந்தச் சட்டம் அவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அடுத்து, போர்க்கால சலுகை ஊதியம் ரத்து, இலவச தபால் ரத்து ஆகிய சட்டங்களும் இவர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. இவற்றோடு இரண்டாம் ஆங்கிலேயே /பர்மா யுத்தத்தில் கடல்வழியாக ரங்கூனை அடையவேண்டும் என்று டல்ஹெளசி பிரபுவால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேல் ஜாதி சிப்பாய்கள் ஜாதிய சிந்தனை அடிப்படையில் இந்த ஆணைக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள். இதன் விளைவாக, இந்தச் சிப்பாய்கள் தரைமார்க்கமாகவே ரங்கூனை அல்லாமல் டாக்காவை அடையவேண்டுமென்று டல்ஹெளஸி பிரபு உத்தரவிட்டான். ஐந்து மாதத்திற்குள் ஏறக்குறைய அந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த பல சிப்பாய்கள் வழியிலேயே மரணமடைந்தார்கள். இந்த நிகழ்வும் கிழக்கிந்திய கம்பெனி சிப்பாய்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றி மேலாக, என்ஃபீல்ட் ரெட்ஃபீல்டு தோட்டாக்களில் பன்றி மற்றும் மாட்டுக்கொழுப்பு தடவவேண்டிய நிலை சிப்பாய்களுக்கு ஏற்பட்டது. இது ஒரு மாபெரும் எழுச்சியைத் தூண்டுவதற்கான சிறு பொறியாய் அமைந்தது

கிழக்கிந்திய கம்பெனி எவ்வாறு துணைக்கண்ட நிலப்பரப்பைத் தன்வயப்படுத்தியது என்பதைப் பற்றி நமக்குப் போதுமான தகவல்கள் உண்டு. இந்த அத்து மீறல்களோடு கிறித்துவப் ஸ்தவ பாதிரிமார்கள் இருண்ட குகைக்குள் கிடக்கும் துணைக் கண்ட மக்களின் ஆன்மாக்களை, உண்மையை நோக்கியும் கடவுளை நோக்கியும் மீட்டெடுப்பது அவர்களது தார்மீகக் கடமையாகவும் மதக் கடமையாகவும் கருதினார்கள். இந்த மதக்கடமைக்கு கிழக்கிந்திய கம்பெனி துணை நின்றது. சிப்பாய்களை ஒன்று கூட்டி இந்து மதம் மற்றும் இஸ்லாமிய மதம் பற்றி தரக்குறைவாகப் பேசப்பட்டது. பாதிரிமார்களின் இந்த ஆணவச் செயல்களோடு, 1928_ல் நடைமுறைக்கு வந்த நியாயமான சாதி எதிர்ப்புச் சட்டமும், விதவை மறுமணச் சட்டமும் மேல்ஜாதி இந்துக்களிடையே பெரும் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தின. இவற்றோடு அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து மதமாற்றம் செய்தாலும் பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டு என்று 1832_ல் கொண்டுவரப்பட்ட சட்டம் இஸ்லாமிய 'சரியாட்' சட்டத்திற்கு முற்றிலும் விநோதமாக இருந்ததால், இஸ்லாமியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாதிரிமார்களின் அதீத நடவடிக்கைகளும் இந்தச் சட்டங்களும் சேர்ந்து மேல் ஜாதி இந்து மற்றும் உயர் குடி இஸ்லாமியர்களிடையே தங்களுடைய மதம் கிறிஸ்துவர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுப் போகிறது என்ற அச்சத்தையும், கலக்கத்தையும் தோற்றுவித்தது. ஆக, 1857 எழுச்சியானது ஒரு விவசாயப் பிரச்னையாகவும், ஜாதிய கட்டமைப்பு மற்றும் மதநம்பிக்கைகள் மீதான தாக்குதலாகவும் கருத்தியல் அடிப்படையில் உருவானது என்று சொல்லலாம். மேலே கூறியவற்றிலிருந்து நாம் இரண்டு சிந்தனைகளை முன்வைக்கலாம்.

1. கிழக்கிந்தியச் சிப்பாய்கள் மேல்ஜாதியினரின் ஆதிக்கத்துக்குப் பதிலாக கீழ்ஜாதியினரின் ஆதிக்கத்தில் இருந்திருந்தால், 1857_ல் நடந்த எழுச்சியின் குணாம்சம் என்னவாக இருந்திருக்கும். நம்மால் இதற்குப் பதில் சொல்ல முடியாது. ஆனால், அப்படி நடந்திருக்குமாயின் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறும் இந்தியத் தேசியத்தின் குணாம்சமும் இன்றைய தன்மையிலிருந்து முற்றிலும் வேறாகஇருப்பதற்கான சாத்தியங்களைக் கொண்டிருந்திருக்கும் என்று மட்டும் சொல்லலாம்.

2. சிப்பாய் எழுச்சியில் பங்கெடுத்துக்கொண்ட பெரும்பாலான சிப்பாய்கள், உயர்ஜாதி இந்துக்களாக இருந்தும் ஏன் முகலாயப் பேரரசரான பகதூர் ஷா ஜாபரிடம் போய் நிற்க வேண்டி வந்தது. (எது இத்தகைய செயலைச் சாத்தியப்படுத்தியது என்று புரிந்து கொள்ள, இந்தப் புத்தகத்தை திரு. அத்வானியும், திரு. வாஜ்பாயும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்).

இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் நாம் முகலாயப்பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷாவின் மதச்சார்பின்மை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது

2 comments:

சிவபாலன் said...

ஒரு "+" குத்து

நன்றி

கருப்பு said...

அற்புதமான பதிவு.