Thursday, May 03, 2007

தீராநதி II

Part 1
பாடப்புத்தகத்தில் முகலாயப் பேரரசின் கடைசி மன்னன் பகதூர் ஷா என்று படித்ததைத் தவிர, வேறு எதுவும் நினைவில் இல்லை. ஆனால், பகதூர் ஷா ஒரு கவித்துவ உள்ளம் கொண்ட கவிஞனாகவும் மதச்சார்பற்றவனாகவும் சூஃபி ஞானியாகவும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவனாகவும் தன் நம்பிக்கைகளைப் பேரரசன் என்ற அதிகாரத்தின் மூலம் செயல்படுத்த முடியாதவனாகவும், ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் கண்ணெதிரெ பார்த்துக் கொண்டிருந்தவனாகவும்... இப்படி படிக்கும்போது கிரேக்க துயர நாடகத்தின் கதாபாத்திரமாகவே நம்முன் விரிகிறான். இந்துக்களைக் காப்பாற்றுபவனாகவும், தீவிரவாத இஸ்லாமியர்களின் கோரிக்கை

ஓரு சமயம் ஓர் இந்து, ஜாபரின் பிரதம மந்திரியான ஹப்பிம் ஹஸன்உல்லாகான் மூலமாக முசல்மானாக மாறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, அந்த இந்துவை அரண்மனையில் இருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டான். (பக்கம் 81) மற்றொரு சமயத்தில், 200_க்கு மேற்பட்ட முசல்மான்கள் அரண்மனைக்கு முன்கூடி ஈது பண்டிகை அன்று பசுவதை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, முசல்மான்களின் மதம் பசுவதையை வேண்டி நிற்கவில்லை என்று பதில் தந்தான். (பக்கம் 81) சன்னி பிரிவைச் சேர்ந்த ஜாபர், ஷியா பிரிவினரின் பண்டிகையான முகரத்தை அரண்மனையில் கொண்டாடியபோது (சன்னி ஷா வாலியுல்லாக்கான் பார்வையில் இது மாபெரும் குற்றம்) ஜாபர், ஷியா பிரிவுக்கு மாற்றம் கொள்கிறார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. இந்த வதந்தியின் அடிப்படையில் டெல்லியைச் சேர்ந்த பல உலமாக்கள் பேரரசரைச் சந்தித்து இந்த வதந்தி உண்மை என்றால் அவரை ஒதுக்கிவைக்கவும் அவரது ஆட்சி அதிகாரமற்றது என்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது பிரகடனம் செய்யவும் தயாராக இருந்ததாக மிரட்டினார்கள். இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், 1850 வாக்கில், ஜாபர் பின்பற்றிய சூஃபி மரபு என்பது காலாவதியானதாகவும் உபயோகமற்றதாகவும் மாறிப்போனது. உலமாக்களின் அதிகாரம் வலுப்பெற்று திகழ்ந்தது. கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் வெறியில் உள்ள பாதிரிமார்களின் பார்வையில், இஸ்லாமுக்கு மாறிய ஆங்கிலேயர்கள் எவ்வளவு கீழ்த்தரமாகப் பார்க்கப்பட்டார்களோ, அதே பார்வையில்தான் உலமாக்களால் ஜாபர் பார்க்கப்பட்டார். (டெல்லி உலமாக்களின் அடிப்படை வாதத்தை உயர்த்திப் பிடித்ததில் பஞ்சாப்பைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர்களுக்குப் பெரும் பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியக் கூலிப்படைகளால்தான் எழுச்சியுடன் சிப்பாய்கள் நசுக்கப்பட்டார்கள் என்பது சுவாரஸ்யமான தகவல்) ஜாபரின் அரண்மனை மருத்துவரான சாமன்லால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியபோது, உலேமாக்கள் அவரை அரண்மனையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். ஆனால், ஜாபர் மருத்துவரின் மத நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விஷயம் என்றும் அதில் அவர் அவமானப்பட ஏதும் இல்லை என்றும் பதில் தந்து அவரை அரண்மனையில் இருந்து நீக்க மறுத்தார். (திரு. அத்வானியிடம் இதைப் பற்றி கேட்டால், பாபர் மசூதியை இடிக்கும் நோக்கோடு அவர் மேற்கொண்ட டொயோட்டா வண்டியை (ரத யாத்திரை) ஓட்டியவர் ஒரு முசல்மான்தான் என்று பெருமைகொள்ள வாய்ப்புண்டு)
மேலே சொல்லப்பட்ட எல்லா காரணங்களையும் மீறி,/ என் வழிபாட்டின் நோக்கம் / புலன் உணர்வுகளுக்கு அப்பால் உள்ளது. / திசைக்காட்டியில் காபாவைக் காணக் கூடியவன் பற்றி சொல்வதற்கு ஏதும் இல்லை.என்று எழுதிய காலிப் என்ற மிகப் பெரிய கவிஞன் ஜாபர் அரண்மனையில் இருந்தான். (பக்கம் 79)சொர்க்கத்தில் அந்திசாயும் பொழுதில் குரானில் சொல்லப்பட்டிருக்கும் தூய்மையான மதுவை உண்பது உண்மைதான். ஆனால், குடிகார கும்பலின் அசாதாரணமான சத்தங்களுக்கு இடையே மது மயக்கத்தில் நண்பர்களோடு நீண்ட நடை சொர்க்கத்தில் எப்படிப் போக முடியும்? போதை ஏறிய மழைக்கால மேகங்களை அங்கு எங்கு காணமுடியும்? இலையுதிர்காலம் இல்லாதபோது, கார்காலம் எப்படித் தோன்ற முடியும்? அங்கு எப்போதும் அழகிய தேவதைகளைக் காணமுடியுமா? பிரிவின் துயரமும் சேர்க்கையின் குதூகலமும் அங்கு சாத்தியமா? முத்தம் கொடுக்கும் தருணத்தில் ஓடிப்போகும் பெண்களை அங்கு காண முடியுமா? (பக்கம் 79/80) என்று எழுதிய காலிப்பும், இந்தக் கவிஞனைத் தன் அரண்மனையில் வைத்திருந்த ஜாபரும் எத்தகைய கவித்துவ உள்ளம் கொண்டவர்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். (இந்த மரபில் இருந்து வந்தவன்தான் சாதத் ஹசன் மண்ட்டோவா? அதனால்தான், காலிப்பிற்குப் பிறகு கவிதை இல்லை, மண்ட்டோவிற்குப் பிறகு சிறுகதை இல்லை என்று மண்ட்டோ எழுதினானா?). மதம் பற்றியும் கடவுள் பற்றியும் ஜாபர் அவையில் எத்தகைய சிந்தனை போக்கு நிலவியது என்பதற்கு காலிப் மட்டுமே சாட்சியாக போதும். (நம் சங்கக் கவிதைகளில் காணக்கூடிய நேரடித்தன்மையை காலிப்பின் கவிதைகளில் காண முடிகிறது). இதன் தொடர்ச்சியாக இஸ்லாமியப் பள்ளியான மதரஸா அன்று எத்தகைய நிலையில் இருந்தது என்று அறிந்து கொள்ளும் போது, ஒரு இந்துவின் பொது புத்தியில் இஸ்லாமியர்கள் பற்றிய பார்வை எப்படிச் சாத்தியமானது என்று யோசிக்க வேண்டியுள்ளது. இந்து மதத்தின் சீர்திருத்தச் சிந்தனையாளரான இராஜாராம்மோகன்ராய், இஸ்லாமிய பள்ளியான மதரஸாவில் படித்த மாணவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் 81) ஓர் ஆங்கிலேய அதிகாரி, ''உலகில் உள்ள எந்தச் சமூகத்தினரை எடுத்துக் கொண்டாலும், இந்தியாவில் உள்ள முகமதியர்களின் வாழ்க்கையில் கல்வி இணைந்து உள்ளது போல் எங்கும் காணமுடியாது என்கிறார். (பக்கம் 95) அவரே மேலும், ''20 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு அலுவலர், அவருடைய மகன்களுக்கு, ஒரு பிரதம மந்திரி தன்னுடைய மகன்களுக்குக் கொடுக்கும் கல்விக்கு ஈடான கல்வியைக் கொடுக்கிறார். நம்முடைய கல்லூரிகளில் கிரேக்கம் மற்றும் லத்தீன் மூலம் நாம் கற்பதை எல்லாம் இவர்கள் அரபி மற்றும் பாரசீகம் மூலம் கற்கிறார்கள். அதாவது இலக்கணம், தத்துவம், தர்க்கம்... (இவர்கள்) சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ... பற்றி சகஜமாகப் பேசுகிறார்கள். இந்தியாவில் விநோதம் என்னவென்றால், வாழ்க்கையில் எந்த மொழி மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிறதோ, அதில்தான் இவர்கள் பாடம் கற்கிறார்கள்'' என்றும் சொல்கிறார். டெல்லி மதரஸா கல்வி என்பது மிகத்தொலை தூரத்தில் இருந்துகூட மாணவர்களைக் கவர்ந்தது. ஜாபர் ஒரு கவிதைப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிடுகிறார். அதில் அவருடைய கவிதை முதல் ஒரு கூலித் தொழிலாளியின் கவிதை வரை சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு பின்னணியில்தான் கிழக்கிந்திய கம்பெனியின் பெரும்பாலான மேல்ஜாதி இந்துச் சிப்பாய்கள், முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் தலைமையை வேண்டி டெல்லி நோக்கிக் கிளம்பினார்கள். (நிலப்பிரபுத்துவ சுயமோகத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாது.)


No comments: